திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பருத்தி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் கோடை காலத்தில் பருத்தி சாகுபடி மேற்கொள்வார்கள் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 70000 ஏக்கருக்கும் மேலாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டு இருந்தது ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பருத்தி சாகுபடி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்வதாக தெரிவித்து இருந்தார்கள்.ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வெயில் அடித்ததால் பாதிப்புகள் குறைந்து பருத்தி செடிகள் நன்றாக உள்ளது எனவும், நிவாரணம் கொடுக்கும் அளவிற்கு பாதிப்பு இல்லை என திருவாரூர் வேளாண்மை துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதை ஏற்றுக் கொள்ளாத விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பருத்தி சாகுபடி குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள் அது மட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக பாதிக்கப்பட்ட பருத்தி சாகுபடி குறித்து கணக்கெடுப்பு நடத்தவில்லை என திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டமும் நடத்தினார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பருத்தி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பருத்தி செடிகள் வேரோடு பெயரும் அளவிற்கும் , பூ வைத்த பருத்தி செடிகள் பூ கொட்டிய நிலையிலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.மாவட்டம் முழுவதும் சுமார் 5000 ஏக்கருக்கு மேலாக பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது எனவும் , ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பருத்தி சாகுபடி செய்துள்ளதாகவும், கோடைகாலத்தில் மாற்று பயிரை தேர்ந்தெடுத்து மண்வளத்தை காக்கக்கூடிய விவசாயிகளின் நலன் கருதி பாதிக்கப்பட்ட கோடை பயிரான பருத்தியை முறையாக வேளாண்மை துறை அதிகாரிகளை வைத்து கணக்கெடுப்பு நடத்த சொல்லி உரிய நிவாரணம் வழங்கினால் தான் குருவை சாகுபடி செய்ய முடியும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்
Curated by Palanikumar M|TimesXP Tamil|6 Jun 2023